Tuesday, October 14, 2014

ராஜயோக தியானம்: எண்ணங்களின் சுழற்சி




எமது மனதில் தோன்றும் எண்ணங்கள் செயல்களுக்கு வழிவகுக்கிறது. செய்து முடிக்கப்பட்ட செயல்கள் ஆத்மாவில் பதியப்பட்டு (சம்ஸ்காரங்கள்) மீண்டும் எண்ணங்களின் உருவாக்கத்துக்கு காரணமாகின்றன. இதுவே எண்ணங்களின் சுழற்சியாகும்.



மனம் மற்றும் புத்தி மீதான சம்ஸ்காரங்களின் தாக்கம்: உதாரணத்துக்கு இப்போது உங்களை, ஓர் கார் விபத்தின் வெறுமனே தொடர்பற்ற ஓர் பார்வையாளராகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். பலர் இக் காட்சியில் வருவார்கள். அனைவரும் பார்க்கும் காட்சி ஒன்றாயினும், அவரவர் சம்ஸ்காரத்திர்க்கேற்ப அவரவர் செயல்பாடுகளும் வேறுவேறாக இருக்கும்.

உதாரணத்துக்கு, இறந்தவரின் உடலை பரிசோதனை செய்பவர் வைத்தியராக இருக்கும். அருகே நிற்பவர்களிடம் விசாரணை செய்துகொண்டிருப்பவர் காவல்துறை அதிகாரியாக இருக்கும். ஒருவர் நிதானமாக நின்று சேதமடைந்த வாகனங்களை கவனித்துக்கொண்டிருகையில், இன்னொருவரோ மிகவும் அபரிதமான உணர்ச்சிகளால் மூழ்கடிக்கப்பட்டிருப்பார். நிதானமாக நின்று வாகனங்களை ஆராய்ந்தவர் மெக்கானிக்காக இருக்கும் அதேநேரம், உணர்ச்சிக் கொந்தளிப்பில் இருப்பவர் விபத்தில் காயப்பட்ட ஒருவரின் உறவினராக இருக்கலாம். ஒரே தூண்டுதல் காரணி தான், ஆனால் ஒவ்வொருவரினதும் செயல்பாடுகள் வேறுவேறாக இருக்கிறது. வேறுபட்ட சம்ஸ்காரங்கள் வேறுபட்ட செயல்பாடுகளுக்கு வழிவகுக்கிறது.

இதேபோலவே, எமது சொந்த மனோநிலையே எமது எண்ணங்களை கட்டுப்படுத்துகிறது என்பதை, எமது கடந்தகால அனுபவங்களில் இருந்து தெரிந்து கொண்டிருக்கிறோம். உதாரணத்திற்கு, ஒருநாளில் பல விடயங்கள் தவறாக நடந்தாலுமே, எமது அதீத உளவலிமையானது அவற்றை அமைதியாக எதிர்கொள்ள உதவுகிறது. இன்னொருசமயம் அத்தகைய ஸ்திரத்தன்மை இல்லாத போது, மற்றையவரால் உதிர்க்கப்படும் சிறிய வார்த்தை கூட மிகவும் மனவருத்தத்தை உண்டாக்கி விடுகிறது. அவ்வாறு பேசியது அவரது குற்றமல்ல, மாறாக எமது சொந்த மனமே அத்தகைய பிரதிபலிப்பை உருவாக்கியது.

எமது மனதில் தோன்றும் ஒவ்வோர் எண்ணங்களின் உருவாக்கத்திலும், ஏதாவது ஒரு அல்லது சில சம்ஸ்காரங்களின் செல்வாக்கு காரணமாக இருக்கும். எமது எண்ணங்களுக்கு  நாம் மட்டுமே பொறுப்பு என்பதை இது தெளிவுபடுத்துகிறது. எனினும் நாம் அதற்கான பொறுப்பினை ஏற்றுக்கொள்ளாமல், புறச் சூழ்நிலைகள் மீது பழி போடவே முனைகிறோம்.

திரும்பத் திரும்ப பலதடவை செய்யப்படும் ஒரு செயலானது, மிகவும் ஆழமான சம்ஸ்காரமாகிறது.  மிகவும் ஆழமாக ஒரு குழி தோண்டப்படும்போது, அதன் அடையாளங்களை முற்றாக அழித்துவிடுவது மிகவும் சிரமமானது.   இதனாலேயே பழைய பழக்கங்களை விடுவதற்கு மிகவும் கடினமாக இருக்கிறது. ராஜயோக தியானத்தின் மூலம் மனமானது கட்டுப்பாட்டில் வைத்திருக்கப்படுகிறது. புத்தியானது விஸ்தீரணம் செய்யப்பட்டு மேன்மையானதாக்கப்படுகிறது. சம்ஸ்காரங்கள் தூய்மையாக்கப்படுகின்றன. இவை தூய்மையான எண்ணங்களுக்கு வித்திட்டு, புதிய, தூய்மையான எண்ணங்களின் சுழற்சி உருவாக்கப்படுகிறது.





No comments:

Post a Comment