Monday, October 27, 2014

ராஜயோக தியானம் : பரமாத்மாவின் இருப்பிடம்


நாம் உறவுமுறை ஏற்படுத்திக்கொள்ளவிருக்கும் ஒருவரின் பெயரை அறிந்திருப்பது எவ்வளவு முக்கியமோ, அதேபோல் அவர்கள் எங்கிருக்கிறார்கள்? வசிப்பிடம் என்ன? என்பவற்றை அறிந்திருப்பதும் அவசியமானதே. அதேபோல் இறைவனுடனான உறவுமுறையை ஏற்படுத்துவதற்கு, அவரது இருப்பிடம் பற்றி துல்லியமாக அறிந்திருப்பதன் மூலம் எமது மனதினை அவரின் பக்கம் திசை திருப்ப முடியும்.


மூவுலகம்

நாம் வசிக்கும் இந்த பௌதீக உலகமானது ஸ்தூல உலகம் எனப்படுகிறது. ஏனெனில் இங்கு வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் ஸ்தூல வடிவமுண்டு. வரலாறு, புவியியல் போன்ற சொற்பதங்கள் இந்தப் பௌதீக உலகத்தில் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஆராய்ச்சி மூலம் பெறப்பட்ட விஞ்ஞான விதிகளும், சடப்பொருட்களின் பண்புகளும் இங்கேயே பொருந்தும்.

இந்த பௌதீக உலகமானது செயல்பாடுகளுக்கான இடமாகும். இது ஒரு சுழற்ச்சி முறையில் தொடர்ந்து மாற்றத்திற்கு உள்ளாகிறது. இங்கே மனிதர்கள் புறக் காரணிகளால் தூண்டப்பட்டு செயல்களை ஆற்றுவதன் மூலம் சந்தோசத்தினை அல்லது துக்கத்தினை அனுபவம் செய்கின்றனர். அதனாலேயே இவ்வுலகமானது, செயல்கள் எனும் விதைகள் விழுந்து பழம் (பலன்) கிடைக்கும் நிலத்திற்கு ஒப்பிடப்படுகிறது.

இந்த பௌதீக உலகத்தில் நடைபெறும் செயல்பாடுகளை நாடகமேடைக்கு ஒப்பிடுவது, கிழக்கில் மட்டுமல்ல மேற்கத்தைய நாடுகளிலும் காணப்படுகிறது. ஆத்மாவாகிய நடிகர், பௌதீக உடல் என்னும் ஆடையை எடுத்து, தனது கதாபாத்திரத்தினை உலக மேடையில் நடிக்கிறார். எல்லையற்ற இந்த நாடகத்தில் முடிவற்ற விதவிதமான கதாபாத்திரங்கள் நடிக்கின்றன. இதே உலகம் தான், பூரணத்துவம் மிக்க சொர்க்கம் என்றழைக்கப்படும் சத்திய மற்றும் திரேதா யுகங்களையும், ஒழுங்கின்மை மற்றும் சீரழிவு மிக்க நரகம் என்று கருதப்படும் துவாபர மற்றும் கலியுகங்களையும் கடந்து செல்கிறது. இவ்வுலகம் மொத்த பௌதீக வெளியின் மிகச் சிறிய பகுதியாகும்.

சடப் பொருள்களாலான, இந்த பௌதீக உலகத்தினைத் தாண்டி இருப்பது ஒளிநிறைந்த சூட்சும உலகம் ஆகும். படத்தில் காட்டப்பட்டது போல், நடுவே, குறிப்பாக மூன்று வேறான நிற ஒளிகளில் காணப்படுகிறது. இங்கே எண்ணம், அசைவு மற்றும் செயல்கள் உண்டு. ஆனால் ஒலி இல்லை.

இவையனைத்தையும் தாண்டி ஒரு உலகம் இருக்கிறது. நேரம், தூரம் போன்ற பௌதீக வரையறைகளை தாண்டி இருக்கும் இந்த உலகத்தினை, பௌதீகமல்லாத ஆத்மாவின் சக்திகளான மனம் மற்றும் புத்தியினால் மட்டுமே அனுபவம் செய்ய முடியும். பௌதீக கருவிகளின் துணைகொண்டு நடத்தப்படும் ஆராய்ச்சிகளால் இந்த உலகத்தினை அடையாளம் காணமுடியாது. செம்பொன் நிறமான தெய்வீக ஒளிநிறைந்த, ஆறாவது தத்துவமாகிய பிரம்மம் என்றழைக்கப்படும் இடமாகும். இவ்வுலகத்தினது நிலை, ஒருபோதும் மாற்றத்திற்குள்ளாகாது. இங்கு அசைவுகளோ சத்தமோ இல்லை. இங்கே நிறைவான அமைதி, நிசப்தம், தூய்மை காணப்படுகிறது. ஆத்மாவானது இங்கு செயலற்ற நிலையில் இருக்கிறது. எண்ணங்கள் மற்றும் சுபாவங்கள் அனைத்தும் விதையினுள் அமிழ்த்தப்பட்டிருக்கும். இங்கே ஆத்மாவானது உடலிலிருந்து தொடர்பற்று, தனது மூல வடிவமாகிய ஒளிநிறைந்த ஆற்றலாக இருக்கும். இது செயலற்ற, புற தூண்டல்கள் எதுவுமற்ற, ஓய்வு நிலையிலுள்ள இன்னொரு தளமாகும். அனைத்து ஆத்மாக்களும் முக்தியடைந்தவுடன் இந்த இடத்தில் பரமாத்மாவுடன் சிலகாலம் தங்கியிருப்பர். இதுவே அனைத்து ஆத்மாக்களினதும் வீடாகும். இங்கிருந்தே அனைத்து ஆத்மாக்களும் வருகிறார்கள். இங்கேயே இறுதியில் அனைத்து ஆத்மாக்களும் செல்கின்றனர். இதுவே பரமாத்மாவாகிய சிவபாபாவினதும் இருப்பிடமாகும்.

ராஜயோகியானவர், தனது மனதினை இந்த பௌதீக உலகத்திலிருந்து திருப்பி தந்தையின் இருப்பிடமான பரந்தாமத்துக்கு வழிப்படுத்துவதன் மூலம் முழுமையான அமைதியை அனுபவம் செய்கிறார்.










No comments:

Post a Comment