Thursday, October 30, 2014

ராஜயோக தியானம் : Meditation - Supreme Communication

தியானத்தில் அமர்ந்திருக்கும்போது, கீழ்க்கண்ட எண்ணங்களை சிந்தனையில் கொண்டுவந்து, அவற்றிலிருந்து சக்தியை பெற்றுக்கொள்வதனை அனுபவம் செய்யவும்.

தியானத்திற்கு பரிந்துரைக்கப்பட்ட எண்ணங்கள்
நான் ஓர் ஆத்மா என்ற விழிப்புணர்வில் இருக்கிறேன்.. நான் புருவமத்தியில் இருக்கும் மிகச்சிறிய ஒளிநிறைந்த புள்ளியாவேன்.. எனது எண்ணங்கள் இந்த உடலுக்கு அப்பால்.. பௌதீக உலகத்துக்கும் அப்பால் சென்று.. மகத்தான ஒளிநிறைந்த பகுதியை அடைகிறது.. அங்கே முழுமையான அமைதியும்.. ஸ்திரத்தன்மையும் இருக்கிறது.. இதுவே எனது வீடாகும்.. 
நான் இப்போது சிவபாபாவின் முன்னால் இருப்பதை உணர்கிறேன்.. ஒளிநிறைந்த புள்ளி வடிவான பாபாவிலிருந்து ஒளியானது கடல் போல எங்கும் பரவுகின்றது.. நான் அந்த ஒளியை எனக்குள் உள்வாங்கிக் கொள்கிறேன்.. பாபா அமைதிக் கடலாவார்.. நான் அந்த அமைதியின் அலைகளை உணர்கிறேன்.. அவை இதமாக.. குளிர்மையாக.. ஆத்மாவை அமைதிப்படுத்துகிறது.. அந்த அமைதியே எனது இயல்பு நிலையாகும்..  
நான் ஆரம்பத்தில் இவ்வாறே இருந்தேன்.. இனிமேல் எப்போதும் இவ்வாறே இருப்பேன்..  
எல்லாம் வல்லவர் தனது சக்தியால் என்னை நிரப்புகிறார்.. பலகீனமான ஆத்மா இப்போது மாற்றமடைந்துவிட்டது.. இப்போது நான் வலிமை.. சக்தி.. அமைதி.. ஒளி.. வல்லமை.. தூய்மை.. பேரானந்தம்.. என்பவற்றின் சொரூபமாகிவிட்டேன்..  

பயனுள்ள முறை : இரவில் எமது கடைசி எண்ணங்களாக எது இருக்கிறதோ, அதுவே காலையில் எமது முதல் எண்ணங்களாகவும் இருக்கும். எனவே இரவு தூங்கப்போகுமுன்பு எமது எண்ணங்களை, தியானத்தின் மூலம் பரமாத்மாவுடன் இணைத்துவிட்டோமேயானால், தூக்கத்தில் அமைதி நிலைத்திருக்கும். 

அதேபோல், காலையில் எழுந்தவுடன் வரும் முதல் எண்ணங்களே அன்றைய நாளுக்கான அடித்தளத்தினை இடுகின்றன. எனவே வழமையாய் எழும்பும் நேரத்தை விட சில நிமிடங்கள் முன்பாக எழுந்து, தியானத்தின் மூலம் பரமாத்மாவிடமிருந்து சக்தியை பெற்றுக்கொண்டோமேயானால், ஆத்மாவினால் அன்றைய தினத்தினை இலகுவாகவும், அன்பு நிறைந்ததாகவும் கழிக்க முடியும். 

இதனை தினசரி சோதனை செய்து விளைவினை அறிந்து கொள்ளலாம்.

மீட்டல் : கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிக்கு முன்னர், 'நான் யார்?' என்பதை நினைவுகூருவதன் மூலம் எமது புத்தியை தெளிவாக்கிக் கொள்ள முடியும். இதன் மூலம் ஏற்படும் வித்தியாசத்தினை பலர் உணர்ந்துள்ளனர். 

வினாக்கள் 

1. பரமாத்மாவின் வடிவம் என்ன? சிவா என்ற பெயரின் பொருள் என்ன?
2. பரமாத்மாவுக்கும் ஆத்மாவுக்கும் இடையேயான வேறுபாட்டினை விளக்குக?
3. இறைவன் சர்வவியாபியாக இருக்க முடியாது என்பதற்கான காரணங்கள் சில?
4. மூவுலகம் என்பதன் பொருள் யாது?








No comments:

Post a Comment