Friday, November 7, 2014

ராஜயோக தியானம் : ராஜயோகத்தில் உள்ளடங்கும் யோகமுறைகள்


ராஜயோகமானது முக்கியமானதாக முதலில் புத்தி யோகம் என்று கூறப்படலாம். ஏனெனில் இந்த யோகமானது அதிகளவில் புத்தியை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. ஆத்மாவில் புத்தியானது ஞானத்தினைக் கிரகிக்கின்றது. எனவே ராஜயோகமானது ஞானயோகமாகவும் இருக்கிறது. புத்தியானது ஞானத்தினை உபயோகித்து பரமாத்மாவுடன் தொடர்பினை ஏற்படுத்தியவுடனேயே அவரை தாயாக, தந்தையாக மட்டுமல்லாது நண்பனாக, அன்புக்குரியவராக மற்றும் துணையாக அன்பினை வெளிப்படுத்துகிறது. எனவே இதில் பக்தி யோகத்தில் வெளிப்படுத்தப்படும் அன்பு இருக்கிறது. இத்தகைய அன்பு இல்லாமல் ஆத்மாவினால் பரமாத்மாவுடனான பூரணத்துவமான உறவுமுறை உருவாக முடியாது.

துறவு மூலமான யோகம்: பரமாத்மா மீதான இத்தகைய அன்பின் மூலம் ஆத்மாவானது இயல்பாகவே அனைத்திலிருந்தும் விலகி இறைவன் ஒருவரிடமே வந்துவிடுகிறது. எனவே ராஜயோகத்தினை சந்நியாச (துறவு) யோகம் என்றும் சொல்லலாம். ஆனால் இந்த துறவானது பௌதீகமானதல்ல. நாம் பௌதீகமாக ஒன்றினை துறந்துவிட்டு, மனதில் எந்நேரமும் அதனையே நினைத்துக் கொண்டிருந்தால் அதனை துறவு என்று சொல்லமுடியாது. அது வெறும் போலியான துறவேயாகும். எனினும், பரமாத்மாவினது அன்பினை அடையாளம் கண்டு அவரை நோக்கி எமது மனமானது கவரப்படுமேயானால், எமது எண்ணங்கள் மற்றும் புத்தியானது இந்த பௌதீக உலகத்தினது கவர்ச்சிகளிளிருந்து விடுபட்டுவிட்டது அல்லது அவற்றினை துறந்துவிட்டது எனலாம். இதுவே அதியுயர்ந்த, இயல்பான, எல்லையற்ற துறவாகும். 

கட்டுப்பாடு மற்றும் திடசங்கல்பத்தின் மூலமான யோகம்: ராஜயோகம் ஒரு ஹத யோகமுமாகும். ஹத என்றால் கட்டுப்பாடான ஒழுங்குமுறை அல்லது வலிமைமிக்க பயிற்சிமுறை என்பதாகும். ராஜயோகத்தில் ஆத்மாவினது ஆழமான புரிந்துணர்வினால், இயல்பான கட்டுப்பாடுகளும், வலிமை மற்றும் சக்தியும் வந்துவிடுகின்றன. இங்கே எவ்வித பௌதீகமான ஆசனங்களும் செய்யாதுவிடினும், ஆத்மாவானது கட்டுப்பாட்டில் இருப்பதனால் ஒவ்வொரு சூழ்நிலைக்கும் தகுந்தாற்போல், தேவையான மனோரீதியான ஸ்திர நிலையில் நிலைத்திருக்கிறது.

ஹத என்றால் திடசங்கல்பம். ஆத்மாவினது திடசங்கல்பம் இல்லாது ராஜயோகம் கைகூடாது. இருப்பினும் இந்த திடசங்கல்ப்பமானது உள்முகமானது. உடலை பத்மாசனத்தில் வைத்திருப்பதற்குப் பதிலாக ராஜயோகியானவர் தனது மனதினை அந்நிலையில் வைத்திருக்கிறார். அதாவது தூய்மையற்ற இந்த பழைய கலியுகத்தில் வாழும்போதும், ஆத்மாவானது அவற்றினால் பாதிக்கப்படாமலும், தூய்மையற்றவற்றின் செல்வாக்கினுள் சென்றுவிடாமலும் தாமரை மலர் போன்று இருக்கிறது.

உடலுக்கு ஓய்வினை வழங்கும் சவாசனம் ராஜயோகத்தில் இல்லை. எனினும் ஆத்மாவானது தனது பௌதீக உடையான அதன் உடலிலிருந்தும், புலனுனர்வுகளிலிருந்தும் விடுபட்டு இருப்பதனால் அதனால் சவாசனத்தினை செய்வதனை விடவும் உயர்ந்த முழுமையான ஓய்வு நிலையை அனுபவம் செய்ய முடிகிறது. 

இவ்வாறாக, ராஜயோகத்தில் அனைத்தும் உள்முக வளர்ச்சிகுரியவையாக மாற்றப்பட்டு, அவற்றின் மேம்பாட்டின் மூலம் முழுதான சமநிலை பெறப்படுகிறது.


செயல்கள் மூலமான யோகம்: ராஜயோகம் ஓர் கர்மயோகமுமாகும் (கர்மம் என்றால் செயல்கள்). கர்மயோகமானது மூன்று வகைப்படும்.

முதலாவதாக, இது செயல்களை செய்துகொண்டே பயிற்சி செய்யும் யோகம். ராஜயோகம் என்பது வெறுமனே எமது அன்பான எண்ணங்கள் மூலமாக பரமாத்மாவுடனான தொடர்பினை ஏற்படுத்துதல் என்பதனால், பௌதீக ரீதியான ஆசனங்களோ, வேறெந்த பௌதீக உதவிகளோ அல்லது கருவிகளோ தேவையில்லை. எனவே நாம் எமது கைகளால் செயல்களைச் செய்துகொண்டிருக்கும்போதே எமது எண்ணங்களை பரமாத்மாவுடன் இணைத்து முழுமையான யோகத்தில் இருக்க முடியும்.

நடக்கும்போதும், பேசும்போதும், இருக்கும்போதும், உண்ணும்போதும், இன்னும் வேறெந்த செயல்களில் நாம் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போதும் கூட எமது எண்ணங்கள் அன்புக்குரிய பரமாத்மாவுடன் இணைந்திருக்கின்றன. எனவே இந்த யோகமே அனைத்து செயல்கள் செய்யும்போதும் தொடர்ந்தும் நிலை மாறாமல் செய்யக்கூடிய ஒன்றாகும்.

இரண்டாவதாக, கர்மயோகத்தினை எமது கர்மங்களின் (செயல்களின்) வெளிப்பாடு என்றும் சொல்லலாம். பரமாத்மாவுடனான எமது தொடர்பானது எம்மை அன்பு, அமைதி, தூய்மை, என்பவற்றினால் நிரப்புகிறது. எனவே எமது செயல்கள் இந்நிலையின் (யோகி நிலையின்) வெளிப்பாடாகவே இருக்கும். செயல்களானது மாற்றமடைந்து தூய்மை நிறைந்ததாகவும், அமைதி மற்றும் அன்பினை பரப்புபவனவாகவும் இருக்கும்.

மூன்றாவதாக, கர்மயோகமானது எமது யோகத்தினை வலுவூட்டும் ஒரு செயல் (கர்மம்) ஆகும். அதாவது இதன் மூலமாக நாம் பரமாத்மாவுக்கு மிக அருகில் வருகிறோம் அல்லது பரமாத்மாவுடனான எமது இணைப்பு மிகவும் வலிமை பெறுகிறது. மனிதர்களுடனான கர்ம பரிமாற்றங்கள் (கொடுக்கல் வாங்கல்) மூலமாக உறவுமுறை உருவாகிறது. அதேபோல் இறைவன் மீதுள்ள அன்பினால், அந்த அன்பின் மூலம் செய்யப்படும் செயல்கள் எமது யோகத்தினை வலிமையாக்குவதுடன், எம்மை இறைவனுடன் மிக நெருக்கத்தில் கொண்டு சேர்க்கிறது. எனவே ராஜயோகம் ஓர் உண்மையான கர்மயோகமுமாகும்.




No comments:

Post a Comment