Tuesday, October 21, 2014

ராஜயோக தியானம்: பரமபிதா பரமாத்மா

நான் ஓர் அமைதியான ஆத்மா. பௌதீகமல்லாத, மிகச்சிறிய ஒளிப்புள்ளி. இந்த உணர்விலிருந்துகொண்டு பிறரையும் என்னால் இவ்வாறு பார்க்க முடிகிறது. இவ்வாறு நாம் பௌதீக அடையாளங்களைவிட்டு வெகு அப்பால் செல்லும்போது, உருவம், தொழில், பிறருடனான சரீர உறவுமுறைகள் போன்றவற்றை மறந்துவிட்டு அனைவரையும் சகோதரர்களாகவே காண்கிறோம். அனைத்து ஆத்மாக்களும் சகோதரர்கள், மிகச்சிறிய ஆற்றல். இவர்கள் உலக அரங்கில் நடைபெறும் இந்த உலக நாடகத்தில், வெவ்வேறு பௌதீக உடைகளில், வெவ்வேறு பாத்திரங்களை ஏற்று நடிக்கின்றனர்.  

ஆயினும், பல கேள்விகள் இன்னும் தோன்றும். நாம் எல்லோருமே சகோதரர்கள் எனின், இந்த உலகமே ஒரு பெரிய குடும்பம் எனின், இந்த ஆத்மாக்கள் அனைவருக்குமே தாய் அல்லது தந்தை என்று யாராவது இருக்கிறார்களா? அதேபோல, நாம் எல்லோருமே, பல்வேறு உடைகளில், பல்வேறு கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர்கள் என்றால், இத்தகைய பிரமாண்டமான நாடகத்திற்கு இயக்குனர் என்று யாராவது இருக்கிறார்களா? ஓர் அதிமேலான பரம்பொருள், சக்திகளின் ஆற்றல்களின் மெய்யறிவின் ஆதாரம், தந்தையாகவும் இயக்குனராகவும் தனது பாத்திரத்தினை நிறைவேற்றக்கூடிய ஒருவர் இருப்பது சாத்தியமா? 

முன்னர் கூறப்பட்டது போல், யோகம் என்றால் இணைப்பு. ராஜ என்றால் அரசன் அல்லது முதன்மையான குறிப்பாக அதிமேலான(supreme) என்று பொருள். எனவே ராஜயோகம் என்பது அதிமேலானவர், தந்தை, இயக்குனர், இறைவன் என நினைவு கூரப்படுபவருடனான இணைப்பு என்று அர்த்தம். 


எனினும் பரம்பொருளின் அடையாளத்தினை நாம் தேடிக்கொண்டு போகுமிடத்து, மிகவும் குழப்பமே உண்டாகுகிறது. ஒவ்வொரு பக்கத்திலிருந்தும் வெவ்வேறு பதில்களே கிடைக்கின்றன. ஏராளமான வேத சாஸ்திரங்களின் மூலம் பல்வேறு முரண்பட்ட கருத்துக்கள் எம்மீது திணிக்கப்படுகையில், நாம் ஒரு கட்டத்தில், இறைவன் என்பவர் உண்மையிலேயே இருக்கிறாரா? அல்லது மனித மனங்களின் கற்பனையா? என்று எண்ணும் நிலைக்குக் கூட வந்து விடுகிறோம். உண்மையாகவே அதிமேலானவர் ஒருவர் இருப்பாராயின், நிச்சயமாக எம்மால் அவரைப்பற்றிய முழு அறிமுகத்தினை, தகவலைகளை பெறுவதும் சாத்தியமே.

மனிதர்களின் ஆராய்ச்சிகள் ஒருபுறமிருக்க, பரமாத்மா மூலமாகவே அவரின் உருவம் மற்றும் அடையாளம் போன்றவற்றின் அறிவை பெறுவது முற்றிலும் வேறுபட்டதாகும். முன்வைக்கப்பட்டுள்ள பல்வேறு கருத்துக்களை இப்போது நாம் ராஜயோகத்தின் படி பரிசீலிக்கலாம். ஒருவேளை அவற்றை ஆராய்வதன் மூலம் பரம்பொருளினை அனுபவம் செய்ய முடியலாம். எது எப்படியிருந்தாலும் மெய்யறிவின் நோக்கம் அனுபவம் செய்தலாகும். உண்மையிலேயே நேரடித் தொடர்ப்பின்மூலம் பரமதந்தையுடனான உறவினை அனுபவம் செய்வது சாத்தியமா?




No comments:

Post a Comment