Monday, October 20, 2014

ராஜயோக தியானம்: Meditation - Tuning of the Intellect


சிறிது நேரம் அமைதியாகவிருந்து, எமது எண்ணங்களை புருவ மத்தியில், சூட்சுமமான மிகச் சிறிய ஒளிப் புள்ளியான ஆத்மா மீது குவியப்படுத்தும் போது, அந்த ஆற்றலானது அவ்விடத்தில் ஒளிர்ந்து பிரகாசிப்பதை உணரமுடியும். இதை திரும்ப திரும்ப பயிற்சி செய்யும்போது, சிறிது காலத்தின் பின்னர் இந்த பிரக்ஞையை சில வினாடிகளிலேயே அடைந்து, தொடர்ச்சியான அனுபவத்தினை பெறமுடியும்.

அறையினை முடியுமானவரை மென்மையாக ஒளியேற்றவும். சிறிதுநேரம் அமைதியாக, உங்களுக்கு வசதியான முறையில் அமரவும். சிரமமான ஆசன முறைகள் அவசியமில்லை. மனமானது சில குறிப்பிட்ட எண்ணங்களை பின்பற்றும்படி பரிந்துரைக்கப்படுகிறது. இந்த எண்ணங்கள் மனதினூடாக அமைதியான முறையில், எளிதாகப் பாய்ந்துசெல்ல அனுமதிக்கப்படும்போது ஆத்ம உணர்வினை அனுபவம் செய்ய முடியும்.

தியானத்திற்கு பரிந்துரைக்கப்பட்ட எண்ணங்கள்

உங்கள் எண்ணங்களை, மனத்தை, சுயம் நோக்கி, மிகச்சிறிய ஒளிப்ப்புள்ளியான ஆத்மாவை நோக்கித் திருப்புங்கள்..

ஆத்மாவாகிய நான், மிகச்சிறிய ஒளிப்புள்ளியாவேன்.. மிக சூட்சுமமான ஆற்றல்.. நான் புருவ மத்தியில் அமர்ந்திருக்கிறேன்.. இதுவே நான்.. ஆத்மா.. இந்த பௌதீக சரீரம் எனது உடையாகும்.. ஆத்மாவாகிய நான் அதனை உபயோகப்படுத்துகிறேன்.. இது எனது இருப்பினை வெளிப்படுத்துவதற்கு உதவுகிறது.. இதனூடாக நான் எனது ஆளுமையை வெளிப்படுத்துகிறேன்..  
இப்பொழுது நான்.. எனது உண்மையான அடையாளத்தை உணர்ந்துவிட்டேன்.. நான், எனது சிறைக்கதவை உடைத்துவிட்டேன்.. இப்போது நான் சுதந்திரமானவன்.. ஒரு பறவையைப் போல என்னால் இப்போது மீண்டும் பறக்க முடிகிறது.. 
இப்போது நான்.. எனது உண்மையான இயல்பாகிய அமைதியுடன் இணைந்துவிட்டேன்.. நான் அமைதியை உணர்கிறேன்.. நானே அந்த அமைதியாவேன்.. இப்போது நான், எனது உண்மையான இயல்பாகிய ஒளியை உணர்ந்துவிட்டேன்..  நான் அந்த ஒளியாகிறேன்.. நானே அந்த ஒளியாவேன்.. இப்போது நான், எனது உண்மையான இயல்பாகிய அன்பினை உணர்ந்துவிட்டேன்.. நான் அந்த அன்பு ஆகிறேன்.. நானே அந்த அன்பாவேன்..  
இப்போது ஆத்மாவானது, சக்தியால் முழுதாக நிரப்பப்படுகிறது.. நான் மிகவும் இலகுத் தன்மையானதாகவும், எளிதாகவும் உணர்கிறேன்.. இப்பொழுது நான், இந்த உடலின் அடிமையல்ல.. அதன் எஜமான் ஆவேன்..  
இப்போது நான் இந்த உலகத்துக்கு, ஒளியினையும், அமைதியினையும், தூய்மையினையும் பரப்புகிறேன்..




பயனுள்ள முறை:  ஒளியினைப் பார்ப்பதனால், நாம் இலகுத்தன்மையினால் நிரப்பப்படுகிறோம். பிறரைப் பார்க்கும் போதும், அவர்களின் புருவ மத்தியில் வீற்றிருக்கும் ஆத்மாவை, ஒளிப்புள்ளியை காண்பதனால் நாள் முழுவதும் இலகுத்தன்மையை உணர முடிகிறது.

மீட்டல்: "பாடம் ஒன்று: நான் யார்?" இத்துடன் முடிவடைகிறது. கீழுள்ள வினாக்களுக்கு விடையளிப்பதன் மூலம் இந்தப் பாடத்தைப் பற்றிய மிக ஆழமான அனுபவமும், புரிந்துணர்வும் ஏற்படும். இதுவும் ஒருவித தியானமே. சிலர் பதிலளிப்பதற்கு முன்பு இரண்டு அல்லது மூன்றுமுறை திரும்பவும் முழு பாடத்தினையும் வாசித்துப்பார்ப்பர். பதிலளிக்கும்போது மகிழ்ச்சியினை அனுபவம் செய்தாலே முக்கியமானது. 

வினாக்கள்:

1. ஆத்மா என்றால் என்ன?
2. ஆத்மாவுக்கும் உடலுக்கும் எத்தகைய வேறுபாடுகள் காணப்படுகின்றன?
3. மனம், புத்தி, சம்ஸ்காரம் என்பவை யாவை?






No comments:

Post a Comment